மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.
மீமிசல், ஆக.13-
மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வேள்வரை ஐந்து வேம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 36 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், நடு மாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 15 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
பரிசு
மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
பந்தயம் நடைபெற்ற சாலையில் பொதுமக்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேள்வரை கிராமமக்களும், இளைஞர் மன்றத்தினரும் செய்திருந்தனர்.