கறம்பக்குடி, புதுக்கோட்டையில் ரூ.34 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கறம்பக்குடி, ஜூலை.23-
கறம்பக்குடி அருகே உள்ள பட்டமா விடுதியில் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.10.50 கோடியில் கட்டப்பட்டுள்ள 96 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, புதுக்கோட்டை பாலநகர் பகுதியில் ரூ.23 கோடியே 57 லட்சத்தில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி கறம்பக்குடி அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் வசிப்பறை, சமையலறை, படுக்கை அறை, கழிவறை, குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
மேலும் சுத்தமான குடிநீர், பேவர் பிளாக் சாலை, ஆழ்குழாய் கிணறு, நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவையும் செய்து தரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் பொதுமக்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்றார். விழாவில் கலெக்டர் அருணா, சின்னத்துரை எம்.எல்.ஏ., தாசில்தார் ஜபருல்லா மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.