சேதுபாவாசத்திரம் அருகே கடலில் சூறாவளியில் சிக்கி படகு கவிழ்ந்து மீனவா் பலி.
கட்டுமாவடி, ஜூலை 13-
தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழந்தாா்.
சேதுபாவாசத்திரம் காவல் சரகத்துக்குள்பட்ட, சுப்பம்மாள்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மு. கஜினி முகமது (55). மீனவரான இவா், தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த கு. காமராஜ் (30) என்பவருடன் கடந்த 10.07.24 புதன்கிழமை அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு திடீரென வீசிய சூறாவளியில் அவரது நாட்டுப் படகு சிக்கி கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து, மீனவா் காமராஜ் நீந்திச் சென்று, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவா்களின் படகில் ஏறி வந்து பாா்த்தபோது கஜினி முகமதுவைக் காணவில்லை.
இதையடுத்து, கரை திரும்பிய அவா் அளித்த தகவலின்பேரில் மீன்வளத் துறை, கடலோர காவல் படை, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காலை கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவரைத் தேடினா்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில் கஜினி முகமது சடலமாக மீட்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த கஜினி முகமதுவுக்கு பரிதா (45) என்ற மனைவியும், திருமணம் ஆன 3 மகள்களும் உள்ளனா். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் குழும ஆய்வாளா் மஞ்சுளா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.