கறம்பக்குடியில் பட்டப்பகலில் துணிகரம்: சாலையில் நடந்து சென்ற நர்சிடம் 9 பவுன் தங்க சங்கிலி பறிப்பு, திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கறம்பக்குடி, ஜூலை.11-
கறம்பக்குடியில் சாலையில் நடந்து சென்ற நர்சிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழிப்பறி திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தங்க சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்தவர் கஸ்பர் கருணைதாசன். இவரது மனைவி கேண்டினா மேரி (வயது 37). இவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மதியம் அவரது வீட்டில் இருந்து பஸ்நிலையம் நோக்கி சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென கேண்டினா மேரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயின் 5 பவுன் ஆரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வழிப்பறி திருடன் தப்ப முயன்றார்.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த செவிலியர் கேண்டினாமேரி சுதாரித்து கொண்டு அந்த வழிப்பறி திருடனின் மோட்டார் சைக்கிளை காலால் எட்டி உதைத்தார். இதில் நிலைதடுமாறிய திருடன் மோட்டார் சைக்கிளுடன் கீழே சாய்ந்தான். உடனே கேண்டினா மேரி சத்தம் போடவே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து வழிப்பறி திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் வழிப்பறி திருடனை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
கைது
இதையடுத்து கறம்பக்குடி போலீசார் அந்த வழிப்பறி திருடனை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கறம்பக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா மேல மணக்குடி சக்கவயல் கிராமத்தை சேர்ந்த சேகரன் மகன் ராஜகோபால் (38) என்பது தெரியவந்தது.
மேலும் அவரது மோட்டார் சைக்கிளில் வெவ்வேறு எண்களை கொண்ட 4 நம்பர் பிளேட்டுகள் மற்றும் இரும்பு கம்பி போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ராஜகோபாலை கைது செய்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
பரபரப்பு
மேலும் அவருக்கு வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மருதன்கோன்விடுதியில் 2 பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி 10 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை கும்பல் பறித்து சென்ற நிலையில் தற்போது கறம்பக்குடியில் பட்டப்பகலில் செவிலியரிடம் தங்க சங்கிலியை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.