ஆர்.புதுப்பட்டினத்தில் தெரு நாய் கடித்து பள்ளி குழந்தைகள் படுகாயம்.
ஆர்.புதுப்பட்டினம்,ஜூலை.06-
ஆர்.புதுப்பட்டினத்தில் தெரு நாய் கடித்து பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா நாட்டானிப் புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 05.07.24 வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடித்து வெளியே வந்த குழந்தைகளை அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று துரத்தி துரத்தி கடிக்கத் தொடங்கியது. இதில் பள்ளி குழந்தைகள் நான்கு பேரை வெறி நாய் கடித்ததால் படுகாயம் அடைந்தனர்.
குழந்தைகளை நாய் கடித்த உடன் அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை மீட்டு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவிக்காக சேர்த்தனர் அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் செவிலியர்களே முதலுதவி செய்தனர். மருத்துவரை வரவழைக்கும் படி கேட்டபோது மாலை 4 மணிக்கு மேல் மருத்துவர் வரமாட்டார் என செவிலியர்கள் கராராக சொல்லிவிட்டார்கள். இதனால் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட குழந்தைகளை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பள்ளி குழந்தைகளை வெறி நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.