புதுக்கோட்டை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மனு.
புதுக்கோட்டை, ஜூன்.25-
புதுக்கோட்டை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
மாநகராட்சியாக தரம் உயர்வு
புதுக்கோட்டை நகராட்சி 100 ஆண்டுகள் பழமையானது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதில் முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், வாகவாசல், 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை, தேக்காட்டூர், கவிநாடு கிழக்கு, மேற்கு, திருவேங்கைவாசல் உள்பட 11 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
இதற்கு மேற்கண்ட ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் பகுதி ஊராட்சியிலேயே தொடர வேண்டும், புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மனு கொடுக்க திரண்டனர்
மாநகராட்சியோடு இணைந்தால் கிராமப்புறங்களில் வரியினங்கள் உயர்ந்து விடும், 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது, ஊராட்சிகளுக்காக வழங்கப்படும் அரசின் பிற சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் எனவும், அதனால் மாநகராட்சியோடு இணைக்க எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் இணைந்து வேண்டாம் மாநகராட்சி மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் வேண்டாம் மாநகராட்சி மக்கள் கூட்டமைப்பினர் தலைமையில் வந்திருந்தனர்.
நீண்ட வரிசையில்…
ஒரே நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் தனித்தனியாக மனுகொடுக்க வந்திருப்பதாக கூறினர்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் வரிசையில் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் கையில் மனுக்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளிப்பகுதியில் நின்றனர். அதன்பின் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் நிறுத்துமிடம் அருகே அமர்ந்தனர். இதற்கிடையில் மனு கொடுக்க வந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து மனு அளித்தனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு நடவடிக்கை
மாநகராட்சியோடு இணைக்க வேண்டாம் என கூறும் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பின் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். இதனை அரசியல் ஆக்க வேண்டாம். எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைப்பினரும், பொதுமக்களும் செயல்பட வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அனைவரிடமும் மனுக்களை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பெற்றனர். பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது