அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ஆவுடையார்கோவில், ஜூன்.13-
ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், என்.சி.சி. மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெற்று தேர்வு பெற்றவர்களுக்கு சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் பாலமுருகன் வழங்கினார். கடந்த 10-ந் தேதி கணினி அறிவியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று பி.காம். வணிகவியல் மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று ஆணை வழங்கப்பட்டது. இதில் வணிகவியல் துறை தலைவர் சீனிவாசன், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அன்பழகன், இயற்பியல் துறை தலைவர் டேவிட்கலைமணிராஜ், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.