கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் சிவகங்கை அரசு மருத்துவமனை மாநிலத்தில் முதலிடம்.
சிவகங்கை, மே.23-
கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பலர் உள்ேநாயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை பிரிவில் தினசரி புறநோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கண்புரை, கண்தசை, கண் அழுத்தம், கருவிழி, கண்ணீர் பை ஆகிய பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையும், கருவிழி மாற்று அறுவை சிகிச்சையும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கண்ணில் ஏற்படக்கூடிய ரத்த கசிவிற்கு லேசர் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்புரை அறுவை சிகிச்சை
இங்கு கடந்த 2021-ம் ஆண்டு 399 பேருக்கும், 2022-ம் ஆண்டு 2,286 பேருக்கும், 2023-ம் ஆண்டு 2,512 பேருக்கும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் முடிய 747 பேருக்கும் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கண் சிகிச்சை புற நோயாளிகள் பிரிவில் 19 ஆயிரத்து 788 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கண்புரை அறுவை சிகிச்சை செய்வதில் பி பிரிவு மருத்துவமனைகளில் இந்த ஆண்டு மாநிலஅளவில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.