அமைதியான முறையில் நடந்து முடிந்த நைனா முகமது ஜனாஸா நல்லடக்கம்.
கோபாலப்பட்டினம்,ஏப்ரல்.29-
படுகொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குலாம் ரசூல் அவர்களின் மகன் நைனா முகமது கடந்த 22.04.2024 திங்கள்கிழமை அன்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில் கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரையில் ஜனாஸாவை வாங்க மறுத்த உறவினர்கள் இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒரு வார காலமாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தற்பொழுது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ஜனாஸாவைப் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்வதாக உறவினர்கள் முடிவு செய்தனர்.
பிறகு ஜனாஸாவை பெற்றுக்கொள்வதற்காக உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் ஜனாஸா வைக்கப்பட்டிருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர்.
ஜனாஸா நல்லடக்கம்
சரியாக பிற்பகல் 3 மணி அளவில் ஜனாஸா வீட்டை வந்து அடைந்தது. பிறகு உறவினர்கள் பார்வைக்காக சில நிமிடங்கள் வாகணத்திலேயே வைக்கப்ட்டு ஜனாஸா காட்டப்பட்டது. ஜனாஸாவைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர்.
பிறகு ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக கோபாலப்பட்டினம் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு ஜனாஸா கொண்டுவரப்பட்டு, பள்ளி வளாகத்தில் வாகனத்தில் வைத்தபடியே ஜனாஸா தொழுகை நடைபெற்றது.
இறுதியாக அடக்கம் செய்வதற்காக கோபாலப்பட்டினம் மையவாடிக்கு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டு அமைதியான முறையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கம் செய்யும்பொழுது திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட நைனா முகமதுவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.
வீடியோ
புகைப்படம்