90 இடங்களுக்கு 2¼ லட்சம் பேர் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-1 முதல் நிலை தேர்வை 3,236 பேர் எழுதினர்.
புதுக்கோட்டை, ஜூலை.14-
90 இடங்களுக்கு 2¼ லட்சம் பேர் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-1 முதல் நிலை தேர்வை 3,236 பேர் எழுதினர்.
குரூப்-1 முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களை அறிவித்தது இதற்கு மாநிலம் முழுவதும் சுமார் 2¼ லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
முதல் நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி, மன்னர் கல்லூரி, மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் இத்தேர்வு நேற்று நடைபெற்றது.
இத்தேர்வை எழுத 4,482 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்கள் தேர்வு எழுத நேற்று காலையில் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
தேர்வு நடைபெறும் மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
3,236 பேர் எழுதினர்
புதுக்கோட்டையில் 3 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 3,236 பேர் எழுதினர். இதில் 1,246 பேர் தேர்வு எழுதவரவில்லை. இத்தேர்வு முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாலும், கண்காணிப்பு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை வீடியோகிராபர்கள் மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இத்தேர்வினை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.