தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிரடி சரிவு.
சென்னை, ஏப்.24-
தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிரடி சரிவு ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 அதிரடியாக சரிந்து, ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது.
ரூ.1,160 அதிரடி சரிவு
தங்கம் விலை கடந்த மாதம் (மார்ச்) தொடக்கத்தில் இருந்து பெரும்பாலான நாட்கள் ஏற்றத்துடனேயே பயணித்து வந்தது. இதன் காரணமாக வரலாறு காணாத உச்சத்தை தங்கம் தொட்டது. கடந்த மாதம் இறுதியில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தையும், அதனைத் தொடர்ந்து ரூ.52 ஆயிரம், ரூ.54 ஆயிரம் என்ற நிலைகளை கடந்து, கடந்த 19-ந் தேதி ரூ.55 ஆயிரம் என்ற இதுவரை இல்லாத உச்சத்தையும் தங்கம் எட்டியது.
தொடர்ந்து அதிகரித்த வண்ணமே காணப்பட்டு வந்த தங்கம் விலை, கடந்த 19-ந் தேதிக்கு பிறகு குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 845-க்கும், ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.145-ம், பவுனுக்கு ரூ.1,160-ம் அதிரடியாக சரிந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 700-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அட்சய திருதியைக்கு முன்னதாக…
நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் தங்கம் வந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.1,160 சரிந்து, ரூ.54 ஆயிரத்து கீழ் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நேரத்தில், ஒரு பெரிய இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இடையில் இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர்ச் சூழல் காரணமாக மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் எதிர்பார்த்தபடியே நேற்று அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது. விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. அட்சய திருதியைக்கு முன்னதாக மேலும் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் இல்லத்தரசிகள் மத்தியில் இருந்து வருகிறது.
வெள்ளி விலையும் குறைவு
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கிராமுக்கு 2 ரூபாய் 50 காசும், கிலோவுக்கு ரூ.2,500-ம் குறைந்து, ஒரு கிராம் 86 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.86 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.