புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 இடங்களில் சோதனை சாவடிகள் நிரந்தரமாக அமைப்பு; கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தம்.

தொடரும் குற்ற சம்பவங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தையொட்டி திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளது.
இந்த மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் நுழையும் இடங்களில் சோதனை சாவடிகள் என்பது முக்கிய விழாக்காலங்கள், நிகழ்வுகளில் அமைக்கப்படும். மற்றபடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிற நிலையில் இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் திருட்டு சம்பங்களில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் இருப்பதில் அதனை ஒரு சவாலாக எடுத்து போலீசார் பணியாற்றி, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மீமிசல் அருகே உள்ள அரசங்கரையில் சோதனை சாவடி பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஆனால் அண்மையில் அரசங்கரை சோதனை சாவடி மூடப்பட்டது. தற்பொழுது மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சோதனை சாவடியில் மீண்டும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
சோதனை சாவடிகள் அமைப்பு
இதேபோல பக்கத்து மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியில் நிரந்தரமாக 9 இடங்களில் சோதனை சாவடி அமைக்க உத்தரவிட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. தச்சங்குறிச்சி, மாத்தூர், சுகந்திரபுரம், காட்டுபாவா பள்ளிவாசல், சவோரியார்புரம், ஆவணம் கைகாட்டி, கட்டுமாவடி, மீமிசல் அருகே உள்ள அரசங்கரை, பூதக்குடி ஆகிய 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மாவட்டத்திற்குள் நுழைவு மற்றும் தப்பித்து செல்லாமல் தடுக்கும் வகையில் இந்த சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பணியாற்றி வருகின்றனர். மேலும் இரவு ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
இதேபோல மேற்கண்ட 9 இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் உள்பட அனைத்து நிகழ்வுகளும் பதிவாகும் காட்சி மூலம் கண்காணிக்கப்படும்.
மேலும் குற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு பெரும் உதவியாக அமையும் என போலீசார் கூறினர். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.





