7-வது புத்தக திருவிழாவையொட்டி நடமாடும் நூலக பஸ்.
புதுக்கோட்டை, ஜூலை.14-
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் நூலக பஸ் பிரசார வாகனத்தினை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் மெர்சி ரம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பஸ்சின் உள்ளே நூலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளதையும், அதில் உள்ள புத்தகங்களையும் பார்வையிட்டார். பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ் நிறுத்தங்கள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அரசு பள்ளிகள் மற்றும் கிராம முக்கிய சந்திப்புகளில் சிறிது நேரம் மக்கள் நூலகத்தை பயன்படுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் நூலக பஸ் பிரசார வாகனமானது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் வாரியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் அதிகாரிகள், புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.