இலவச திரைப்பட ஆப்களை பதிவிறக்கம் செய்கிறீர்களா? – எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்!

இலவச திரைப்பட ஆப்களை பதிவிறக்கம் செய்கிறீர்களா? – எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார்!
Alert: Cyber Crime Warning on Illegal Movie Streaming Apps | GPM Thalaimurai Media
இணையதளங்களில் இலவசமாகத் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பார்ப்பதற்காக அங்கீகாரமற்ற (Pirated) செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் பொதுமக்களுக்குத் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு (Cyber Crime) தலைமையகம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபத்து நிறைந்த செயலிகள்:
இலவசத் திரைப்படங்கள் மற்றும் ஓ.டி.டி சேவைகள் வழங்குவதாகக் கூறி இயங்கும் அங்கீகாரமற்ற செயலிகள், பெரும்பாலும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற பாதுகாப்பான தளங்களில் இருக்காது. இவை மூன்றாம் தரப்பு இணையதளங்கள் (Third-Party Websites) மற்றும் டெலிகிராம் மூலமாகவே பகிரப்படுகின்றன.
இவற்றை நிறுவும் போது மொபைலில் உள்ள அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்கள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன.
தனிப்பட்ட தரவுகள் திருட்டு:
இத்தகைய சட்டவிரோத செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மொபைலில் உள்ள தொலைபேசி எண்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’, போலி முதலீட்டு மோசடி மற்றும் வங்கிப் பணத்தைத் திருடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடும்.
சட்ட நடவடிக்கை பாயும்:
சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது, பயன்படுத்துவது அல்லது மற்றவர்களுக்குப் பகிர்தல் ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சைபர் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பு ஆலோசனைகள்:
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டும் பயன்படுத்தவும்.
- மொபைல் செட்டிங்ஸில் ‘Install Unknown Apps’ என்ற அனுமதியை ஒருபோதும் வழங்காதீர்கள்.
- தெரியாத லிங்க்குகளைக் கிளிக் செய்து திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
புகார் அளிக்க:
நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டாலோ, உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





