மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி!
பொதுவாக மார்கழி மற்றும் தை மாதங்களில் நிலவும் இந்த பனிப்பொழிவு, தற்போது பிப்ரவரி மாதத்திலும் நீடிப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை முதலே ஊர் முழுவதையும் போர்த்தியது போல வெண்பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் அருகில் இருக்கும் நபர்களோ அல்லது கட்டிடங்களோ கூடத் தெரியாத அளவிற்குப் பனி மூட்டம் அடர்த்தியாக உள்ளது.
இந்தக் கடும் பனிப்பொழிவு காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகச் செல்கின்றன.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பணியாளர்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் அதிகாலையில் மீன் பிடி தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் இந்தப் பனிமூட்டத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குளிர் காற்றுடன் கூடிய இந்தப் பனிப்பொழிவால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், இயற்கை எழில் கொஞ்சும் இந்த பனிமூட்டத்தைப் புகைப்படங்கள் எடுத்து இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வரும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.





