புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 87 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி.

புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 87 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை; தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் காந்தி ஜெயந்தி அன்று தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்காத 87 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:-
சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன், திருச்சி தொழிலாளர் கூடுதல் ஆணையர் திவ்வியநாதன், இணை ஆணையர் லீலாவதி ஆகியோரின் அறிவுரையின் படி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தங்கராசு தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான நேற்று (காந்திஜெயந்தி) திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 125 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்காத 87 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்க வேண்டும்.
அவ்வாறு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்காமல் தொழிலாளர்களை பணியாற்ற நிர்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





