புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 489 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் வருகிற 1-ம் தேதி நடக்கிறது.

தொழிலாளர் தினமான வருகிற 1-ந் தேதி காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் குறித்தும், சுய சான்றிதழினை அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்தும், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.





