புதுக்கோட்டை மாவட்டத்தில் விசைப்படகு & நாட்டுப்படகுகள் ஆய்வு; அடுத்த மாதம் 15 & 20-ந் தேதிகளில் நடக்கிறது.

படகுகள் ஆய்வு
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நடப்பாண்டிற்கான (2025-26) தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983-ன்படி, மீன்பிடி தடைக்காலத்தில், அனைத்து வகை மீன்பிடி படகுகளை (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆய்வு செய்யப்பட உள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகுகளை அடுத்த மாதம் (மே) 15-ந் தேதியும், கட்டுமாவடி முதல் ஏனாதி முடிய உள்ள 32 மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகுகளை அடுத்த மாதம் 20-ந் தேதியும் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதையொட்டி மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மீனவ கிராமங்களுக்கும் மேற்கொள்ளவும்.
ஆதார் அட்டை
மேலும் படகு ஆய்வின் போது விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை ஆய்வுக்குழு வசம் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தங்களது விசைப்படகு, நாட்டுப்படகினை தவறாது ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
மேலும் அன்றைய தினங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.




