சென்னை விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை – திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, பிப். 8 –
சென்னை விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை – திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை விமான நிலையத்தில் ஒரு பெண்ணின் தாலி சங்கிலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளின் செயலுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருமண பின்னணி & சுங்கத்துறையின் நடவடிக்கை
இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா, 2023 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். ஜெயகாந்த் பிரான்சில் வசிப்பதால், தனுஷிகா விசா பெறும் வரை இலங்கையில் இருந்தார். விசா பெற்ற பிறகு சென்னை திரும்பிய போது, விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.
இந்த சோதனையின் போது, தனுஷிகா அணிந்த வளையல், தாலி சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.
நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “நமது மரபுப்படி அதிக எடையில் தாலி அணிவது வழக்கம். இந்த மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், “கணவருடன் இன்னும் மண வாழ்க்கையை தொடங்காத பெண்ணின் தாலி சங்கிலியை பறித்தது நியாயமற்ற செயல்” எனக் கூறி, அந்த நகைகளை உடனடியாக திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டார்.
சுங்கத்துறைக்கு பதிலறை
பயணிகள் அணிந்திருக்கும் தங்க நகைகளுக்கு சுங்க வரி சட்டப்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாலி சங்கிலியை பறிமுதல் செய்த அதிகாரிகளின் செயல்பாடு கட்டாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்காக, சுங்கத்துறை ஆணையருக்கு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.