வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதை எதிர்த்து ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல்

மணமேல்குடி, பிப்.25:
வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதை எதிர்த்து ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல்
ஜெகதாப்பட்டினத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடிப்பதையும், விற்பதையும் எதிர்த்து, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீன் வியாபாரம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் தினசரி 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன.
இந்த பகுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த உத்தமநாதன் என்ற மீன் வியாபாரி, சில ஆண்டுகளாக மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவரைத் தவிர, வேறு யாரும் மீன் வியாபாரம் செய்யக்கூடாது என அவர் அங்கு உள்ள மீனவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. நேற்று காலை, ஒரு பெண் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தபோது, அவரின் மீன்களை உத்தமநாதனின் மனைவி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலை மறியல்:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், வெளிமாவட்ட மீனவர்கள் இங்கு தங்கியிருந்து மீன்பிடிக்கக் கூடாது என்றும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் உத்தமநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதற்காக, ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, மீனவர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.
இதனால், அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





