4 நாட்டுப்படகுகளும் சிறைபிடிப்பு இராமநாதபுரம் மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் தொடரும் அத்துமீறல்.
இராமேசுவரம், ஜூலை.2-
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
நாட்டுப்படகு மீனவர்கள்
இராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 3 நாட்டு படகுகளில் 19 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதே போல் தொண்டி நம்புதாழையில் இருந்தும் நாட்டுப் படகு ஒன்றில் 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
25 மீனவர்கள் கைது
அப்போது ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மேற்கண்ட 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து, கைது செய்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
பாம்பன், தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதயராஜ், கிரசியான், லோகிஷ், திகாஸ், ஆரோக்கிய யேசுதாஸ், ஜார்ஜன், அமிலதாஸ், தேவதாஸ், ஆஞ்சியன், லாரன்ஸ், அந்தோணி, ஸ்டீபன், மைக்கேல், தயாஸ், முருகன், சத்தியசீலன், களஞ்சியம், இசக்கிமுத்து, ராஜ் என்பதும் மற்றும் தொண்டி நம்புதாழையைச் சேர்ந்த பெரியசாமி, குமரன், பாண்டி, பழனி, ராமமூர்த்தி, ஆறுமுகம் ஆகிய மீனவர்கள் என்றும் தெரியவந்தது. இந்த மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மீனவர்கள் அச்சம்
கடந்த வாரம் இராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் தொண்டியைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகளுடன் 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கைகளால் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், தற்போது நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.