இறுதி பட்டியல் வெளியீடு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 78 ஆயிரத்து 514 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்
புதுக்கோட்டை, ஜன.7-
இறுதி பட்டியல் வெளியிடபட்டதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13,78,514 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் ஆவர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்க திருத்தம்- 2025-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருணா வெளியிட மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர். அதன்பின் கலெக்டர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 79 ஆயிரத்து 123 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 99 ஆயிரத்து 323 பெண் வாக்காளர்களும், 68 திருநங்கைகளும் என மொத்தம் 13 லட்சத்து 78 ஆயிரத்து 514 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டதில் 13 லட்சத்து 54 ஆயிரத்து 393 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின் சிறப்புமுறை திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள படிவங்கள் பெறப்பட்டன.
புதிய வாக்காளர்கள்
கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முறை திருத்தத்தின் போது 13 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்கள், 18 ஆயிரத்து 248 பெண் வாக்காளர்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 31 ஆயிரத்து 750 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல 3,506 ஆண் வாக்காளர்களும், 4 ஆயிரத்து 122 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 7 ஆயிரத்து 629 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 201 மனுக்கள் திருத்தம் மேற்கொள்ள பெறப்பட்டதில் 7,639 மனுக்கள் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. புதுக்கோட்டை நகர எல்லைக்குள் 83 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிராம எல்கைக்குள் 864 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
பெண்கள் அதிகம்
17 வயதுடைய இளம் வாக்காளர்கள் தாங்கள் 18 வயது தகுதி பெறும் நாளை அடிப்படையாக கொண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1-ம் நாளில் 18 வயது பூர்த்தியடையும் போது அடுத்த காலாண்டில் மனுதாரர் பெயர் வாக்களர் பட்டியலில் இணைக்கப்படும். ஜனவரி 1-ந் தேதியில் 18 வயது நிறைவடைந்து சிறப்பு சுருக்க காலத்தில் விண்ணப்பிக்க தவறிய மனுதாரர்கள் தொடர் திருத்த காலத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்தில் மனுக்களை பூர்த்தி செய்து வழங்கலாம். அல்லது தகுதியான வாக்காளர்கள் http://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானதில் மாவட்டத்தில் ஆண்களை விட 20 ஆயிரத்து 200 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), அக்பர் அலி (இலுப்பூர்), தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.