திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து: 3 கிராம ஊராட்சி மக்கள் 4 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்

சோமரசம்பேட்டை, ஜன.7-
திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம ஊராட்சி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த மறியல் போராட்டத்தினால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாநகராட்சியுடன் இணைப்பு
திருச்சி நகரின் மிக அருகில் உள்ள அதவத்தூர், அல்லித்துறை, வயலூர், அப்பாதுரை, நெருஞ்சலக்குடி உள்பட 22 கிராம ஊராட்சிகள் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. திருச்சி மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து உள்ளது. இதற்கான அரசாணை கடந்த மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டது.
மாநகராட்சியுடன் இணைப்பதற்கு இந்த கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நெருஞ்சலக்குடி கிராம மக்கள் லால்குடியில் போராட்டம் நடத்தினார்கள்.
சாலை மறியல் போராட்டம்
இதனை தொடர்ந்து அதவத்தூர், வயலூர், அல்லித்துரை ஆகிய 3 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஒன்று திரண்டு சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஒன்று கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் தங்களது கிராமங்களை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் காலை 8 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 12 மணியையும் தாண்டி 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தின்போது ஒரு பெண் கையில் சிலம்புடன் எழுந்து நின்று கண்ணகி நீதி கேட்பது போல் அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
500 பேர் கைது
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் பெண்கள் உள்பட 500பேரை கைது செய்தனர். போராட்டத்தின் போது, ஒரு பெண் மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதே பிரச்சினைக்காக ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து இருந்த விவசாய சங்க தலைவர் சின்னதுரையை போலீசார் நேற்று காலை அவர் வீட்டில் இருந்து கிளம்ப முடியாத வகையில் வீட்டோடு சிறை வைத்தனர். பின்னர் அவரை சாலை மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.




