ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் உடைப்பு: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்ப்பதில் சிக்கல் பாலம் அமைத்து தர கோரிக்கை
ஆவுடையார்கோவில், டிச.26-
ஆவுடையார்கோவில் அருகே கண்மாயில் உடைப்பு: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்ப்பதில் சிக்கல் பாலம் அமைத்து தர கோரிக்கை
ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட மரவனேந்தல், குமுளூர், வடவாத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் அப்பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பின.
இதனால் வடவாத்தி வடக்கு பகுதிக்கு செல்லக்கூடிய மண் சாலையில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வடவாத்தி வடக்கு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் இந்த மண்சாலையை கடந்து தான் விவசாயத்திற்கும், அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்தநிலையில் தற்போது முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். 15 நாட்களில் நெற் பயிர்கள் அறுவடை தொடங்கி விடும். இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை கரை சேர்க்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன், அப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.