கோதைமங்கலம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை
ஆவுடையார்கோவில், டிச.23-
கோதைமங்கலம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரிக்கை
ஆவுடையார்கோவில் தாலுகா களபம் ஊராட்சிக்குட்பட்ட கோதைமங்கலம் கிராமத்தில் கடந்த 16-ந் தேதி பெய்த கனமழையால் கோதைமங்கலம் ஏந்தலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் வழிகாட்டுதலின் படி கோதைமங்கலம் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலையின் குறுக்கே பள்ளம் பறித்து தண்ணீரை வெளியேற்றியதால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமலும், வயல்வெளிகளில் தேங்காமலும் இருந்தது. ஆனால் மழைநீர் வடிந்து ஒருவார காலமாகியும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை சாலையை சரிசெய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோதைமங்கலம் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.