14 இராமேசுவரம் மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு
இராமேசுவரம், டிச.20-
14 இராமேசுவரம் மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு மீண்டும் இலங்கை சிறையில் அடைப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி 2 விசைப்படகுகளில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இராமேசுவரம் மீனவர்கள் 14 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான 14 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 14 மீனவர்களும், நேற்று இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், அதை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை என்றும் தீர்ப்பளித்தார். ஆனால் மீனவர்கள் தரப்பில் அபராத தொகை செலுத்தப்படவில்லை. இதனால் 14 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை அதிபர், இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இராமேசுவரம் மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.