தொடர் மழையால் உப்பு விலை உயர்வு: ஒரு டன் ரூ.4500 வரை விற்பனை
இராமநாதபுரம், டிச.17-
தொடர் மழையால் உப்பு விலை உயர்வு: ஒரு டன் ரூ.4500 வரை விற்பனை
உப்பு உற்பத்தி
சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை அருகே ஆனைகுடி, கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல், பப்பனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உப்பள பாத்திகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நல்ல மழை பெய்த நிலையில் திருஉத்தரகோசமங்கை அருகே ஆனைகுடி பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உப்பு பேக்கிங் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல் உப்பு லாரிகளில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விலை உயர்வு
பருவமழையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் கல் உப்பு விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு வரை 1 டன் உப்பு ரூ.2,500-க்கு விலை போன நிலையில் தற்போது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 வரை விலை போவதாக கூறப்படுகிறது.
மாவட்டத்தில் பல ஊர்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தூத்துக்குடி, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் மருந்து தயாரிப்பதற்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
உப்பு விலை உயர்ந்த நிலையிலும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நம்பி வாழும் ஏராளமான உப்பள தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.