கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கோட்டைப்பட்டினம், டிச.17-
கோட்டைப்பட்டினம் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆற்று பாலம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நிரம்பினால் திறந்து விடப்படும் உபரி நீர் இந்த பாலத்தின் வழியாக தான் கடலுக்கு செல்லும்.
இந்த பாலத்தின் வாய்க்கால் மஞ்சக்குடியில் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில் வாய்க்கால் வரும் வழியில் கரையோரங்களில் உள்ளவர்கள் வாய்க்காலை அடைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாய்க்கால் குறுகிவிட்டது. மேலும் அதிக மழை பெய்தால் உபரி நீர் வாய்க்காலில் செல்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது.
சாலை மறியல்
இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டது. பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், மீமிசல் இன்ஸ்பெக்டர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.