இராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இராமநாதபுரம், டிச.16-
இராமநாதபுரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி என்ஜினீயரிடம் ரூ.19 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் மோசடி
பாம்பன் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). என்ஜினீயர். இவர் இந்தோனேசியாவில் வேலை பார்த்து ஊருக்கு வந்திருந்தார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு பங்கு வர்த்தகம் தொடர்பாக குழு ஒன்று தொடர்பு கொண்டு அவரை அக்குழுவில் இணைத்துள்ளது. மேலும் அந்த குழுவினர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய தங்கராஜ் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு 10 தவணைகளாக ரூ.18 லட்சத்து 89 ஆயிரத்து 999 அனுப்பியதாக கூறப்படுகிறது.
பணத்தை அனுப்பியதும் தங்கராஜின் வங்கி கணக்கிற்கு அந்த குழுவினர் ரூ.1 லட்சம் அனுப்பி உள்ளனர். செலுத்திய பணத்திற்கு 10 சதவீத லாபத்துடன் கூடுதல் பணம் கிடைக்கிறதே என நம்பி அடுத்தடுத்து அவர்கள் கூறியபடி பணம் செலுத்தினாராம்.
தொடர்ந்து செலுத்திய பணத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்காததாலும், பணம் கேட்பதிலேயே அந்த குழுவினர் ஆவலாக உள்ளதாலும் சந்தேகம் அடைந்த தங்கராஜ் அக்குழு குறித்து விசாரித்தபோது ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்யும் கும்பல் என்பது தெரியவந்தது.
சைபர்கிரைம் போலீசார் விசாரணை
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கராஜ் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் இதுபோன்று ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அந்த மோசடி நபர்களின் வங்கி கணக்ைக முடக்கி அதில் இருந்த ரூ.5 லட்சத்தை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.