அம்ருத் திட்டப்பணிகள்: புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் முகப்பு புதுப்பொலிவு பெறுகிறது
புதுக்கோட்டை, டிச.16-
அம்ருத் திட்டப்பணிகள்: புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் முகப்பு புதுப்பொலிவு பெறுகிறது
வளர்ச்சி பணிகள்
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ருத் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் அம்ருத் திட்டத்தில் ரூ.8 கோடி அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு மும்முரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் பழமையானதாகும். இந்த தோற்றம் தற்போது புதுப்பொலிவுடன் மாற உள்ளது.
முகப்பு தோற்றம்
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் தரைத்தளத்தில் ஏற்கனவே இருந்த சிமெண்டு தளம் போன்றவை அகற்றப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரெயில் நிலையத்தின் தற்போதைய முகப்பு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட மாதிரி புகைப்படத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில் அதற்கான பணிகள் தற்போது ரெயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும்.