அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி:மாநில அளவில் 3-வது இடம் பிடித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு பரிசு
புதுக்கோட்டை, டிச.14
அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி:மாநில அளவில் 3-வது இடம் பிடித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு பரிசு மாநில அளவில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் 2.0 மூலம் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில், புதுக்கோட்டை பூவை மாநகர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் அன்பரசன், அய்யப்பன் ஆகியோர் அறிவியல் சார்ந்த புதுமை கண்டுபிடிப்பான, எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கக்கூடிய ஸ்மார்ட் புல்டோசர் கருவியினை கண்டுபிடித்தமைக்கு மாநில அளவில் 3-வது இடம் பிடித்தனர்.
இதற்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருணா நேற்று வழங்கினார். அதன்பின்னர், கல்வித்துறை அதிகாரிகளுடன் மாவட்ட கல்வி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகித பகுப்பாய்வுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிகழ்வுகளில், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி), செந்தில் (தொடக்கக்கல்வி), கலா ராணி (தொடக்கக்கல்வி), லீலாவதி (தனியார் பள்ளிகள்), மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் (புத்தாக்க திட்டம்) சாலை செந்தில் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.