உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிய சிறப்பு முகாம்.
புதுக்கோட்டை, அக்.9-
உணவு வினியோகிக்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிய சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இணைய வழியில் சேவை
அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உணவு வினியோகம், மின் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் வினியோக ஊழியர்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணைய வழியில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இணைய வழியில் உணவு வினியோகம் உள்ளிட்ட சேவை பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெறும்.
சிறப்பு முகாம்
இச்சிறப்பு முகாமிற்கு வருகை தரும் தொழிலாளர்களின் அசல் ஆவணங்களை குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், ஓட்டுனர் உரிமம், புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்த வந்து பதிவு செய்யலாம்.
மேலும் இதன்மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04322-290916-ஐ தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு முகாம் நாளை(வியாழக்கிழமை) தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.