கோடியக்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்படுகிறதா? காட்சி கோபுரம் காட்சியாகிறது.
புதுக்கோட்டை, செப்.25-
கோடியக்கரை கடற்கரையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காட்சி கோபுரம் காட்சியாகுகிறது.
கோடியக்கரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரையும் ஒன்றாகும். இங்கு அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தருவது உண்டு. மேலும் கடற்கரையை ரசிக்க பொதுமக்கள் வந்து செல்வார்கள்.
பொதுமக்கள் வருகையையொட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை பகுதியில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த காட்சி கோபுரம் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த பகுதியை சுற்றுலா தலமாக்க அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோடியக்கரை கடற்கரையை யொட்டி உள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும், வனத்துறைக்கு சொந்தமானதும் என்பதால் சுற்றுலா தலமாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காட்சி கோபுரம்
இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், “கோடியக்கரை கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்படக்கூடியது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் திகழ்கிறது. இதனால் இந்த இடத்தில் சுற்றுலா தலம் அமைக்க வாய்ப்பு இல்லை.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது உயர் அதிகாரிகள் தான். அதனால் தற்போதைக்கு கோடியக்கரையை சுற்றுலா தலமாக மாற்ற திட்டம் எதுவுமில்லை.
அங்குள்ள காட்சி கோபுரமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது” என்றனர். இதனால் கோடியக்கரை கடற்கரையில் அமைக்கப்பட்ட காட்சி கோபுரம் காட்சியாகிறது.