செப்டம்பர் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்ளிட்ட ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் என சொல்லப்படுகிறது.