பனை மரங்களை வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

பனை மரங்களை வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
பனை மரம்
தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடு, வளத்தோடும் ஒன்றுபட்டு இருப்பது பனைமரம். மாநில மரமாக திகழுவதோடு, நீர்நிலைகளின் காவலன் என்றும் பனைமரம் அழைக்கப்படுகிறது.

150 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த பனைமரங்கள் செங்கல் சூளை, தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.
இதனை பாதுகாக்கவும், அவை வெட்டப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மேலும் அதனை கண்காணிக்க கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது.
அதன்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவுக்கு மாவட்ட கலெக்டர் தலைவராகவும், வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்காணிப்பு தலைவராகவும் செயல்படுவார் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அனுமதி அவசியம்
வட்டார அளவிலான குழு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் கூட்டாக கிராமம் வாரியாக இருப்புப் பதிவேட்டை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பனை மரத்தினை வெட்டுவதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி அவசியம் என்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் இதுதொடர்பாக துறை அதிகாரிகள் எடுத்துரைத்து பனை மரங்களை பாதுகாப்பதிலும், தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் பனை மரங்களை வெட்டுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
10 மரக்கன்றுகளை நடவேண்டும்
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரம் வெட்டுவதற்கு அனுமதி வேண்டி தனிநபர், பொதுத்துறை நிறுவனங்கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதனை வட்டார அளவிலான குழுவினர் ஆய்வு செய்து மாவட்ட குழுவுக்கு அறிக்கை அளிக்கவேண்டும். பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு பனை மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 பனை மரக்கன்றுகள் நடுவதை உறுதி செய்ய வேண்டும்.
வெட்டப்படும் மரங்களின் பாகங்களை எடுத்துச்செல்லும்போது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் மூலம் வழங்கப்பட்ட கடிதத்தை காண்பிக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.





