சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம்; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம்; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
பகுப்பாய்வுகள்:
அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பிற இனங்கள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன.

Click here to Download
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா? என்பதையும் குறித்து மதிப்பிடும் வகையில் பெயர்கள் தொடர்பாக விரிவான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த பணியை கிராம ஊராட்சிகளைப் பொறுத்தளவில், துணை வட்டார அலுவலர்களுடன் இணைந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (ஊராட்சி) மேற்கொள்ளப்பட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை இந்த பணியை பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி-மாநகராட்சி ஆணையர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுவான பெயர்கள்:
குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொதுவான சொத்துகள் ஆகியவற்றை பட்டியலிட்ட பிறகு, அத்தகைய பெயர்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே நிலவும் சூழ்நிலையை, குறிப்பாக உள்ளூர் மக்களின் கருத்து-பதில்களை பொறுத்து மதிப்பிட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பெயர்களை தொடர்வதில் களத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவை ஒரு பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகவும், உள்ளூர் மக்களும் மாற்றத்தை கோரினால், அந்தப் பெயர்கள் பொதுவான பெயர்களாக மாற்றப்பட வேண்டும்.
சில பெயர்கள் – பிரிவுகள் அவசியம் மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொது-சாதிச்சார்பற்ற தன்மை கொண்ட புதிய பெயருடன் பெயரை மாற்றலாம்.
பொதுமக்கள் ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்ற விரும்பவில்லை என்றால் அந்த பெயர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.
இதுபோன்ற பெயர் மாற்றங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், தற்போதுள்ள பெயர்களைத் தொடர விரும்பினால், அதற்கான காரணங்களை பரிசீலித்த பின்னர், அவ்வாறு தொடருவது அனுமதிக்கப்படலாம்.
பெயர் மாற்றம்:
சரிபார்க்கப்பட்ட குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொதுவான சொத்துகளின் பெயர் மாற்றம் குறித்து மாவட்ட கலெக்டரால் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும்.
இதன் மீது ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின், அவற்றை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் முதல் 21 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அளிக்க காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும்.
21 நாட்களுக்குள் ஆட்சேபனைகள்-கருத்துகள் ஏதும் பெறாவிட்டால், மாவட்ட கலெக்டர்கள் அதனை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரசால் பெயர் மாற்றம் குறித்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்படும்.
பெயர்கள் மதிப்பீடு செய்யும் பணியை வருகிற 14-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். பொதுமக்களுடன் கலந்துரையாடி பெயர்களை மாற்றுவது தொடர்பான விண்ணப்பத்தை 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட அரசாணையில் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை 24-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும். பெயர் மாற்றம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி கிராம சபை பகுதியில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்னென்ன பெயர்கள் வைக்கலாம்?
தமிழக அரசு நீக்கப்படும் பெயர்களுக்கு பதிலாக வைக்க வேண்டிய புதிய பெயர்களை எடுத்துகாட்டாக அறிவித்துள்ளது.
அதன்படி குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி ஆகிய பெயர்கள் வைக்கலாம்.
அதேபோல் தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், சீத்தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகிய பெயர்களை வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்:
காந்தி ஜெயந்தியன்று நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
அன்றைய கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற அரசு அறிவுறுத்தியது. அதன்படி முதல் தீர்மானங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையான 3 தேவைகளை பட்டியலிட உத்தரவிட்டுள்ளது. 2-வதாக இழிவுப்படுத்தும் பொருள் தரும் சாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துகளின் பெயர்களை மாற்றுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.





