கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 என்ஜினீயர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்,மே.13-
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 என்ஜினீயர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடாவில் வேலை
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 37 வயதான என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று தனது செல்போனில் முகநூலை பார்த்துள்ளார். அதில் கனடாவில் பிரபல நிறுவனத்தில் என்ஜினீயர் பணி மற்றும் பல்பொருள் அங்காடி பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்றும், தகுதியானவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறுந்தகவல் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த தகவலை இவர், தஞ்சையை சேர்ந்த தனது நண்பரான என்ஜினீயர் ஒருவருக்கும் தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய இருவரும் கனடாவில் வேலைக்கு செல்ல முடிவு எடுத்தனர். அதன்படி அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணில் இருவரும் தொடர்பு கொண்டனர்.
ரூ.4 லட்சம் அனுப்பியுள்ளனர்
மறுமுனையில் பேசிய மர்மநபர், தான் தகுதி அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்வு செய்து கனடாவிற்கு வேலைக்கு அனுப்பும் முகவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் உங்களது சுயவிவரங்கள் அடங்கிய தொகுப்பினை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்குபடி கூறினார். இதையடுத்து என்ஜினீயர்கள் இருவரின் சுயவிவரங்களை அனுப்பி வைத்தனர். இதை சரிபார்த்த முகவர், நீங்கள் இருவரும் கனடாவில் வேலை செய்ய தகுதியானவர்கள் என்று கூறியதோடு, பணி நியமன கடிதத்தை விரைவில் அனுப்புவதாகவும் உறுதியளித்தார்.
மேலும் அவர், வெளிநாட்டிற்கு செல்வதற்கான விசா, டிக்கெட் போன்றவற்றையும் எடுத்து தருவதாக கூறியதோடு அதற்கான செலவுத்தொகையினை ஆன்லைனில் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதனால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என தவணைமுறையில் இருவரும் தலா ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 351 வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 702 ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசில் புகார்
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மர்மநபரிடம் (முகவர்) பணி நியமன கடிதம் குறித்து கேட்க இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தனர். இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.