வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்குvவாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர கட்டுப்பாடுகள்; தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்துக்கான கட்டுப்பாடுகளை தஞ்சை தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
தஞ்சை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான, கலெக்டருமான தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாளன்றும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணிநேரத்திலும் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்டாயமாக அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் பின்பற்ற வேண்டும். அதன்படி எவ்வித பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களும் நடத்தக்கூடாது. தேர்தல் தொடர்பான தகவல்களையும் ஒளிப்பதிவு. தொலைக்காட்சி மற்றும் அதனை ஒத்த பிற சாதனங்கள் வாயிலாக மக்கள் பார்வைக்கு எடுத்து செல்லக்கூடாது. இது அனைத்து மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களையும் உள்ளடங்கியது.
பிரசாரம் செய்யக்கூடாது
பொது மக்களை ஈர்க்கும் விதத்தில் எவ்வித இசை நிகழ்ச்சி, நாடக நிகழ்ச்சி அல்லது ஏதேனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் வாயிலாக தேர்தல் சார்ந்த எந்த தகவலையும் மக்களிடம் பிரசாரம் செய்யக்கூடாது. மேற்கண்ட விதிகளை மீறுபவர்களுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பிரசார காலம் முடிவடையும் நிலையில், அரசியல் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் எந்தவொரு பிரசாரமும் தொகுதிக்குள் நடக்கக்கூடாது.
தேர்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தாவண்ணம். தேர்தல் பிரசாரத்திற்காக தொகுதிக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்களாக இல்லாதவர்கள் பிரசாரம் முடிந்து தொகுதியில் தொடர்ந்து இருக்கக்கூடாது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 6 மணிக்கு பிறகு செல்லத்தகாதது ஆகி விடும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளருக்கு ஒரு வாகனமும், அவரது முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும் மற்றும் அவரது கட்சி தொழிலாளர்கள், முகவர்கள், கட்சி தொண்டர்கள் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லா சட்டசபை தொகுதிகளிலும் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம்.
தடை உத்தரவு
எந்தவொரு வேட்பாளரும் வாடகை வாகனத்திலோ அல்லது அவருக்கென அனுமதிக்கப்பட்ட வாகனத்திலோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அல்லது வாக்குச்சாவடியிலிருந்து அழைத்து சென்றாலோ அல்லது அழைத்து வந்தாலோ மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தற்காலிக சேவை மையம் அலுவலகத்தை வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் 2 நபர்களை கொண்டு அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் தேவையற்ற கூட்டங்களை சேர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அத்தகைய அலுவலகங்களை கையாள்பவர்கள் அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். குற்றக்குறிப்பு நிலுவையிலுள்ள நபர்களை அத்தகைய சேவை மையத்தை கையாள அனுமதிக்கக்கூடாது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட தொகுதிக்குள் எந்தவொரு பொது இடத்திலும் சட்டவிரோதமான கூட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களை நடப்பதை தவிர்கும் பொருட்டு தேவையேற்படின் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தும் அலுவலரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.