வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு.
அன்னவாசல், ஏப்.16-
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.
அசுத்தம் கலந்த விவகாரம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து 15 மாதங்கள் ஆகிய நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
பதாகையால் பரபரப்பு
இதனை கண்டித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் கிராமமக்கள் அந்த கிராமத்தில் 2 இடங்களில் பதாகை வைத்துள்ளனர். அந்த பதாகையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவத்தில் நீதி கிடைக்காததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.