வெயிலையும் பொருட்படுத்தாமல் தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
இராமேசுவரம், மே.2-
வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கோடை விடுமுறையை தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தனுஷ்கோடி
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. இதனிடையே கடும் வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
குறிப்பாக புயலால் அழிந்து போன தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாளான நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
குறிப்பாக பகல் நேரத்தில் கடும் வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் கையில் குடை பிடித்த படியும், துணியால் முகத்தை மூடிய படியும் அரிச்சல் முனை சாலை வளைவில் நின்று இரண்டு கடல் சேரும் இடத்தையும் கடலின் நடுவே தெளிவாக தெரிந்த மணல் திட்டுகளையும் பார்த்து ரசித்தனர். மேலும் ஆபத்தை அறியாமல் தடுப்பு சுவரின் கற்கள் மீது நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதேபோல் மண்ணோடு மண்ணாக புதைந்து காட்சியளிக்கும் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் உள்ள கட்டிடங்களையும் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் வந்திருந்தனர். ராமேசுவரம் ராமர் பாதம், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.