வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? கலெக்டர் விளக்கம்.
புதுக்கோட்டை, ஏப்.24-
வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
வெப்ப அலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் அதிகரித்து வெப்ப அலையின் தாக்கம் இருக்கலாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள கீழ்காணும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெப்ப அலை வீசும் காலங்களில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தாகம் எடுக்காவிடிலும் கூட அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
பருத்தி ஆடைகள்
மெல்லிய, வெளிர் நிறமுள்ள, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்து செல்வது அல்லது குடையின் பாதுகாப்புடன், காலணி அணிந்து செல்லவும். வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும். குறிப்பாக பகல் 12 மணிமுதல் 3 மணி வரை வெளிப்புற வேலைகளை தவிர்க்கவும். பயணங்கள் மேற்கொள்ளும் போது குடிநீரை எடுத்து செல்லவும்.வெளியில் வேலை செய்யும்போது தொப்பி அணியவும் அல்லது குடையை பயன்படுத்தவும். மேலும், தலை, கழுத்து, முகம் மற்றும் கை, கால்களில் ஈரமான துணிகளை பயன்படுத்தவும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டு செல்ல வேண்டாம். மயக்கம் அல்லது உடல்நிலை சரியில்லையென உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
நீரிழப்பை தடுத்தல்
வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, நீராகாரம், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை பருகி நீரிழப்பை தவிர்க்கவும். கால்நடைகளை நிழலான இடங்களில் கட்டி வைப்பதோடு அவற்றுக்கு போதுமான தண்ணீர் வழங்கிட வேண்டும். வீடுகளை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மேலும், திரைச்சீலைகள் பயன்படுத்தி இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கவும். மின்விசிறியை பயன்படுத்த வேண்டும்.மேலும் அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்கவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட முதியவர்களை குளிர்ந்த மற்றும் நிழலான இடத்தில் படுக்க வைத்து ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். வெப்பம் குறைந்த நீரை தலையில் ஊற்றவும்.
தீ விபத்துக்கான…
எலுமிச்சை சர்பத் அல்லது நீர்மோர் கொடுத்து உடலின் நீர் இழப்பை சரிசெய்யவும். மேலும் பாதிக்கப்பட்ட நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும். மேலும், கோடை காலத்தில் வீடுகளில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விடவும். சமையல் எரிவாயு உருளையை பாதுகாப்பாக உபயோகித்து முடித்துவிட்டு முறையாக மூடிவைப்பது அவசியம்.
தேவையற்ற குப்பைகளை வீட்டின் அருகில் பற்றவைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், மின்சாதனங்களால் தீ விபத்து ஏற்படாதவாறு மின் சாதனங்களை கவனமாக கையாள வேண்டும். கோடைகாலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.