விமானிகள் போராட்டம், நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீர் ரத்து; பயணிகள் கடும் அவதி.
புதுடெல்லி, மே.9-
நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுப்பு எடுத்து போராட்டம்
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து நிறுவனங்களை கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது.
தொடர்ந்து அதே பெயரில் இயங்கி வரும் இந்த விமானங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200-க்கு மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து திடீரென உடல்நலக்குறைவு விடுப்பு எடுத்து போராட்டத்தில் இறங்கினர். விமான நிறுவனத்தின் தவறான நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
கடைசி நேரத்தில் ரத்து
இது விமான போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. விமானிகள் உள்ளிட்ட ஊழியர்கள் திடீரென விடுப்பு எடுத்ததால் கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவானது.
இதனால் நாடு முழுவதும் 80-க்கு மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட இருந்தவை ஆகும்.
கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், நாட்டின் பல விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். டெல்லி, பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சி என பல விமான நிலையங்களில் பயணிகளுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது.
ஏராளமான உடைமைகள் மற்றும் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களுக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுவும் பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடித்து விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தபோது, விமானங்கள் ரத்து செய்யப்பட்ட தகவல் அவர்களுக்கு கூறப்பட்டதால் அவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பயணிகள் போராட்டம்
இதைத்தொடர்ந்து அவர்கள் விமான நிலையங்களிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடு செல்ல முடியாததால் தங்கள் வேலைகள் பறிபோய் விடும் எனக்கூறி கதறி அழுதனர்.
அந்தவகையில், கேரளாவின் கண்ணூரில் இருந்து சார்ஜா செல்வதற்காக தனது கணவர் மற்றும் இரட்டைக்குழந்தைகளுடன் விமான நிலையம் வந்திருந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘நான் 9-ந்தேதி (இன்று) பணியில் சேர வேண்டும். ஆனால் 10-ந்தேதி கொச்சியில் இருந்து எனக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கூறுகிறது. 9-ந்தேதி வரவில்லை என்றால் சார்ஜாவுக்கு வர வேண்டாம் என எனது நிர்வாகம் கூறியிருக்கிறது. அப்படியிருக்க 10-ந்தேதி நான் சார்ஜா சென்று என்ன பயன்?’ என கேள்வி எழுப்பினார்.
இதைப்போல நேற்று தங்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் தங்கள் வேலை போய்விடும் என பலரும் கூறி ஆவேசமடைந்தனர். மேலும் சிலர், தங்கள் விசாவும் காலாவதியாகி விடும் என்றும் கவலை தெரிவித்தனர்.
மன்னிப்பு கோரியது
விமான போக்குவரத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த தடங்கலுக்காக பயணிகளிடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மன்னிப்பு கோரியது.
மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயண கட்டணம் முழுமையாக திரும்ப அளிக்கப்படும் எனவும், விரும்பும் பயணிகளுக்கு மற்றொரு நாளில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘எங்கள் கேபின் ஊழியர்களின் ஒரு பிரிவினர் கடைசி நேரத்தில் உடல்நலக்குறைவு விடுப்பு எடுத்ததால் நேற்று (நேற்று முன்தினம்) இரவு முதல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதமாகியும் வருகின்றன. இந்த பிரச்சினைக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை அறிய அந்த ஊழியர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம்’ என தெரிவித்தார்.
மத்திய அரசு தலையிட வேண்டும்
இதற்கிடையே கடைசி நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பிரச்சினைக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன.
80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் நாட்டின் பல பகுதிகளிலும் விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.