முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரம்; அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் வாங்க நடவடிக்கை.
மீமிசல், செப்.18-
முத்துக்குடா சுற்றுலா தல பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் வாங்க திட்டமிடப்படுகிறது.
முத்துக்குடா
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல், முத்துக்குடா, கோடியக்கரை உள்பட அதனை சுற்றி கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இதில் சுற்றுலா தலம் போன்ற இடம் எதுவுமில்லை. விசைப்படகுகள், நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர மீன்பிடி தொழில் சார்ந்த தொழில்களும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடற்கரை பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக பொழுது போக்கு அம்சத்துடன் கூடிய சுற்றுலா தலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் முத்துக்குடா கடற்கரை பகுதி தேர்வானது. இந்த பகுதியில் அலையாத்தி காடுகளும் அதிகமாக உள்ளது. இதனால் இந்த இடத்தில் கரைப்பகுதியில் பொழுது போக்கு அம்சத்துடன் கூடிய பூங்கா உள்ளிட்டவை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
கட்டுமான பணி
இந்த நிலையில் முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு நிதி ஒதுக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. இதில் கரைப்பகுதியில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் காத்திருப்பு அறை, கேண்டீன் வசதி, கழிவறை வசதி, சிறுவர் விளையாடுவதற்கான பூங்கா போன்றும் அமைக்கப்படுகிறது. மேலும் பசுமைமயமாக்கலுக்காக அந்த இடத்தில் சுமார் 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:- முத்துக்குடாவில் கரைப்பகுதியில் முதற்கட்டமாக கட்டுமான பணிகள் 80 சதவீத அளவில் நிறைவு பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக கடலில் படகுகளில் சென்று அலையாத்தி காடுகளை சுற்றிப்பார்க்க படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. இதில் கடலில் படகுகளை நிறுத்தி வைக்க மரக்கட்டைகளிலான தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
படகுகள்
இதைத்தொடர்ந்து படகுகள் வாங்கப்பட உள்ளது. இதில் டீசல், மோட்டார் அல்லது சூரிய மின் சக்தியில் இயங்க கூடிய படகுகளில் எந்த மாதிரியான படகுகள், எத்தனை இருக்கைகள் வசதி உள்ள படகுகள் வாங்குவது, எத்தனை எண்ணிக்கையில் வாங்குவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதில் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் முடிவு செய்து அறிவிப்பார்கள். அதன்பின் அடுத்தகட்டமாக படகுகள் வாங்கப்படும். இது 2-வது கட்ட பணிகள் ஆகும். இந்த பணிகள் முடிவடைந்ததும் சுற்றுலா தலம் பயன்பாட்டிற்கு வரும். இதனால் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.