மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெறுவதையொட்டிவலைகள் பின்னும் பணியில் மீனவர்கள் தீவிரம்.
கோட்டைப்பட்டினம், ஜூன்.11-
மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெறுவதையொட்டி வலைகள் பின்னும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வள துறையினரால் தடை விதிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வலைகள் பின்னும் பணி தீவிரம்
இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகில் உள்ள பழுதுகளை கரையில் ஏற்றி சரி செய்வார்கள். மீன்பிடிக்க தேவையான வலைகளை புதிதாக பின்னுவார்கள். படகுக்கு வர்ணம் தீட்டுவது மற்றும் மீன் பிடிக்க தேவையான பொருட்களை வாங்குவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவார்கள்.இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி முடிவுக்கு வரும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஆயத்த நிலையில் உள்ளனர். அதன் முதல் கட்டமாக மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலைகளை பின்னும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி வலைகளை மீனவர்கள் மின்விளக்கு அமைத்து இரவு பகலாக பின்னி வருகின்றனர். பழுது பார்க்க கரையில் ஏற்றிய படகுகளுக்கு புதிதாக வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட மீன் பிடித்தளம் தற்பொழுது களைகட்ட தொடங்கி உள்ளது.