மீன்பிடி தடைக்காலம் அமல்:கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி; ஆட்டிறைச்சி விற்பனை அதிகரிப்பு
புதுக்கோட்டை, ஏப்.29-
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில், கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆட்டிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
மீன்பிடிக்க தடை
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான வங்கக்கடலில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி, ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இதனால், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி கிடையாது. குறைந்த அளவு தூரம் வரை செல்லும் பைபர் படகுகளில் சென்றே மீனவர்கள் மீன்பிடிக்க முடியும். அதன் மூலம் 30 சதவீதம் அளவுக்கே மீன்கள் கிடைக்கும். அதுவும் சிறிய ரகம்தான்.
வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி
மீன்பிடி தடைக்காலத்தில் பெரிய அளவிலான கடல் மீன்களின் வரத்து இல்லாமல் போவதால், அந்த நேரத்தில் தேவையை ஈடுகட்ட மேற்கு கடற்கரையோர பகுதியான திருவனந்தபுரம் முதல் மும்பை வரையுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும். இந்த ஆண்டு அதுவும் குறைந்து போனதால், வளர்ப்பு மீன்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், சேலம், மேட்டூர், ராணிப்பேட்டை, வேலூர், பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், கூடூர், பீமாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குட்டைகள் அமைத்து மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
விலை உயர்வு
இந்த குட்டைகளில் வனாமி இறால், ஜிலேபி, விரால், கெண்டை, ஏரி வாவல் போன்ற மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் குளங்கள், ஏரிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஏலம் எடுத்து மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த குளத்து மீன்களின் விலை வழக்கமான விலையைவிட சற்று உயர்ந்துள்ளது. இதனால், மீன் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தில் வளர்ப்பு மீன்களின் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், மீனவர்கள் ஒரு கோரிக்கையையும் வைக்கின்றனர்.
அதாவது, மேற்கு கடற்கரையோர பகுதியான அரபிக்கடலில் தென்கிழக்கு பருவமழை காலமான ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கலாம் என்று மீனவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
ஆட்டிறைச்சி விற்பனை அதிகரிப்பு
இதற்கிடையே கடல் மீன்கள் சாப்பிட்டு பழகிய மீன்பிரியர்கள் தற்போது ஆட்டிறைச்சி பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் ஆட்டிறைச்சி விற்பனை சற்று அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.850 முதல் விற்பனையானது. மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப ஆட்டிறைச்சியை வாங்கிச்சென்றனர்.