மின்சாரம் தாக்கி பெண் பலி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, R.புதுப்பட்டினம் கிராமத்தில், மின்வாரிய துறையின் மெத்தன போக்கால் பெண் உடல் கருகி பலியான சம்பவத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கண்டன அறிக்கை
இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி.முஹம்மது மீரான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..
01.04.2024, அன்று காலை 7 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுக்கா, R.புதுப்பட்டினம் முஸ்லிம் தெருவில், மின்சார ட்ரான்ஸ்பார்ம் அருகே உள்ள ஸ்டே கம்பி அருந்து விழுந்ததில், அதன் அருகில் இருந்த இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
அதை அறியாத அந்த ஊரைச் சேர்ந்த ராவியத்தம்மாள் (50) என்பவர், அந்த இரும்பு வேலியை தொட்டவுடன் அவர் மீது மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்கள்.
அவரை காப்பாற்றச் சென்ற அவருடைய கர்ப்பிணி மகள் தஸ்லிமா பானு (24) மின்சாரம் பாய்ந்ததில், அவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஒரு பசுமாடும் இறந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடம் இருப்பதால், இங்கு தான் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மேலும் தனியார் பள்ளி பேருந்தில் பிள்ளைகளை அனுப்பவதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கூடும் பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாகும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், மின்வாரியத்துறையின் ஊழியரிடம், மின்சார ஸ்டே கம்பி அறுந்துகிடக்கிறது என்று பலமுறை தகவல் தெரிவித்தும், அதை அவர் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்ததால். மின்சாரம் தாக்கி ராவியத்தம்மாள் (50) உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள், மேலும் ஒரு மாடு பலியாகியுள்ளது மற்றும் அவருடைய கர்ப்பிணி மகள் தஸ்லிமா பானு (24) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள்.
இந்த மெத்தனப்போக்கில் ஈடுபட்ட மின்வாரியத்துறை ஊழியர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த ராவியத்தம்மாள் (50) அவர்களின் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு தொகை தர வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கண்டன அறிக்கையில் கூறியிருந்தார்.