மாவட்டத்தை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்; உற்பத்தி பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை, ஏப்.29-
புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டு, அதன் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
தமிழகத்தை பசுமை மயமாக்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் அதனை சமாளிக்கும் வகையில் பசுமை மயமாக்கல், மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வி துறை உள்ளிட்ட துறைகள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் காலநிலை மாற்ற இயக்கம் மூலம் பசுமை மயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன.அந்த வகையில் வனத்துறை சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமை மயமாக்கல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளன. இதனை 2024-2025-ம் ஆண்டிற்குள் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நர்சரி கார்டன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வனச்சரக அலுவலக வளாகம் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக நர்சரி கார்டன் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 5 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் வேங்கை, புங்கை, தேக்கு, நாவல் உள்ளிட்ட மரங்களும், பழ வகை மரங்களும் என அதன் சார்ந்த மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இதில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் வரை தற்போது தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இலவசமாக வினியோகம்
கோடை காலம் முடிவடைந்ததும் மழைக்காலம் தொடங்கும் போது இந்த மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பு சுவர் பகுதி மற்றும் சாலையோரங்களிலும், பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களின் வளாகத்திலும் இந்த மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் பசுமையான தோற்றம் உருவாகும்.இந்த நிலையில் மரக்கன்றுகள் தயாராகும் பணி நடைபெறுவதை வனத்துறையின் நர்சரி கார்டனில் திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வனத்துறை அதிகாரி கணேசலிங்கம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.