மாவட்டத்தில் 12 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு; கலெக்டர் மெர்சி ரம்யா தகவல்.
புதுக்கோட்டை, ஜூலை.4-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கக் குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி தெரிவித்ததாவது:-
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் திறன்மிகு மாநிலமாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி காலநிலை மாற்ற இயக்கக் குழு கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அறிமுகப்படுத்தியுள்ள பசுமை பள்ளி திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பசுமை பள்ளிகள்
இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 பசுமை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியை பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பை அமைத்தல், காய்கறி தோட்டங்கள், மூலிகை தோட்டங்கள், உரம் தயாரிக்கும் கூடங்கள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குதல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர, பல்வேறு துறைகளால் மேற்கொள்ளக்கூடிய பல்வேறு காலநிலை தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, காலநிலை மாற்ற இயக்க பசுமை தோழர் அபிராமி, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், காலநிலை மாற்ற இயக்கக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
12 பள்ளிகள் விவரம் வருமாறு:-
1.ஆலங்குடி சிலட்டூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
2.சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி,
3.கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
4.மாஞ்சன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி,
5.ஆலங்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
6.மறமடக்கி அரசினர் மேல்நிலைப்பள்ளி.
7.கந்தர்வகோட்டை கறம்பக்குடியில் உள்ள ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி.
8.புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி,
9.கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
10.திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,
11.வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி,
12.கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.