மாவட்டத்தில்கோடை மழையால் குளங்களில் நீர்மட்டம் உயர்வு.
புதுக்கோட்டை, ஜூன்.13-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை மழையால் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கோடை காலம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெயில் சுட்டொித்தது. கடும் வெயிலால் குளங்கள் பல வறண்டன. நீர்மட்டம் குறைந்து குட்டை போல் காணப்பட்டது.
மாவட்டத்தில் பெரிய கண்மாயான கவிநாடு கண்மாயில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்தது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கோடை மழை பரவலாக பெய்ய தொடங்கியது. அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மழை பெய்தது.
நீர்மட்டம் உயர்வு
இந்த நிலையில் கோடை மழையினால் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்தது.
கடந்த மே மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 646 மில்லி மீட்டர் அளவு மழை பெய்திருந்தது. இது வழக்கமாக பெய்யும் அளவை விட அதிகமாகும். ஜூன் மாதம் தொடக்கத்திலும் கடந்த வாரத்திலும் மழை பெய்தது. இதனால் குளங்களில் மழை நீர் தேங்கியது. கவிநாடு கண்மாய் குளத்தில் குறிப்பிட்ட அளவு பரந்து விரிந்த நிலையில் தண்ணீர் கிடக்கிறது.
வறண்டு கிடந்த கண்மாயில் கோடை மழையால் தண்ணீர் தேங்கி கிடப்பதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்ததாக பருவ மழைகளில் சராசரியாக மழை பெய்தால் குளங்களில் நீர் பெருகும். விவசாயம் செழிக்கும், குடிநீர் பிரச்சினையும் தீரும்.