‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம்:விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள்அதிகாரி தகவல்.
புதுக்கோட்டை, ஜூன்.16-
‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல் சாகுபடி
புதுக்கோட்டையில் தற்ேபாது பருவமழை பெய்து வருகிறது. எதிர் வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ள இருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை இம்மழையினை பயன்படுத்தி உழவு செய்து பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்.
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிர் விதைகளை விதைக்க வேண்டும். பின்னர் நன்கு வளர்ந்தவுடன் பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்திட வேண்டும்.
மண்வளம் மேம்படும்
பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர்முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் நிலை நிறுத்துகின்றன. பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது.மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தரக்கூடியது. மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாக பயன்படுகிறது, மண்ணின் பவுதீக மற்றும் ரசாயன தன்மைகளை மேம்படுத்துகிறது.
தக்கைப்பூண்டு விதைகள்
பசுந்தாள் உரங்கள் இடுவதால் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணின் நீர்ப்பிடிப்பு திறன் மேம்படுகிறது. மண்ணின் உரப்பயன்பாட்டு திறன் அதிகமாகிறது. மேலும், களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணின் கார அமில தன்மைகளை சீர்படுத்துகிறது. தற்போது புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், ஆதனக்கோட்டை துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் புத்தாம்பூர் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் முதல்-அமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்படுகிறது. தேவையான விவசாயிகள் இதனை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.